ஹதீஸ் (ஆதாரப்படுத்தலும் அளவுகோல்களின் மீள்வரையறையும்)
“நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எமக்கில்லை”(2:32)
ஹதீஸ் ஆதாரப்படுத்தலும் அளவுகோல்களின் மீள்வரையறையும் எனும் இந்நூலின் சுருக்கப் பதிப்பொன்று ஹதீஸின் ஆதார பூர்வத்தன்மை – பிரிகோடுகளை மீள்வரையறை செய்தல் எனும் தலைப்பில், எம்மால் முன்னம் வெளியிடப்பட்டது. இப்போது வெளியிடப்படுவது மூல நூலின் பூரணமான மொழிபெயர்ப்பு.
கலாநிதி இஸ்ரார் அஹ்மத் கான் அவர்களது இந்த நூல் 2010 இல் முழு அமைப்பில் வெளியிடப்பட்டது. அவர் தனது ஆய்வில் ஹதீஸின் ஆதாரபூர்வத் தன்மை எனும் நுட்பமான பொருள் குறித்துப் பேசுகின்றார். ஹதீஸ் அறிவிப்புக்களின் உள்ளடக்கத் திற்கான தொடர் வரிசை, அதன் நம்பகத் தன்மை, அதன் அறிவிப்பாளர் வரிசையை உறுதிப்படுத்தும் முனைப்பு ஆகியவற்றில் செலுத்தப்படும் கவனத்தை விட, பிரதான ஹதீஸ் கிரந்தங்களின் தொகுப்பாளர்கள் பிரிகோடுகளின் முறைமைகளில் செலுத்தியுள்ள கவனம் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இக்கிரந்தங்களில் தொகுக்கப்பட்டுள்ள ஹதீஸ்களில் ஒன்றோ சிலவோ, மற்றும் சில ஹதீஸ்களுடன் நேரடியாக முரண்படுகின்றமை; தாம் கொண்டுள்ள கருத்துக்களின் தாத்பர்யத்தைத் தெளிவுறுத்தத் தவறி விடுகின்றமை; அல்லது அல்குர்ஆனின் போதனைகளுடன் ஒவ்வாது செல்கின்றமை என்பன அறிவுறுத்தப்படுகின்றன.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மறைவை அடுத்து புழக்கத்தில் வலம் வந்து கொண்டிருந்த பெருந்தொகையான ஹதீஸ்கள் இட்டுக்ட்டப்பட்ட போலியான ஹதீஸ் களாக இருந்தன என்ற உண்மையை அலட்சியம் செய்வது அறிவார்ந்த ஆராய்ச்சிக்குப் பொருந்தாது என்பதையும் அவர் நிறுவுகின்றார். இவற்றால் நம்பிக்கையின் அடிப்படைத்தூது மாசுபடலாயிற்று. அரசியல் சார்பு, மதப் பிரிவினைகள், பொருளாதாரம், இறையியல் ரீதியிலான கிரந்தங்கள் முதலானவற்றுக்கு ஆதரவு தேடி முட்டுக் கொடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. அரசியல் மற்றும் மார்க்க சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் புதிதாகத் தோன்றி வளர ஆரம்பித்து, அவையனைத்தும் தத்தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள ஹதீஸை வாகனமாகப் பயன்படுத்தித் தவறான தகவல் பிரச்சாரங்களைக் கொண்டு சென்றுள்ளன.
ஹதீஸ் தவறாக பயன்படுத்துவதும் துஷ்பிரயோகம் செய் வதும் ஏதோ புதிதான ஒன்றல்ல; சிக்கல்கள் மலிந்த, எளிதில் மாறுகின்ற இன்றைய உலகில் கடும் வாதப் போக்கை நியாயப் படுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்டதும் போலியுமான ஹதீஸ்கள் பிரயோகம் செய்யப்படுகின்றமை அப்பட்டமான துஷ்பிரயோகமே. குறிப்பாக, பெண்கள் பற்றியனவும் வன்முறைகளைத் தூண்டி அமைதிக்குக் குந்தகம் விளைக்கும் மார்க்கத் தீர்ப்புகள் பற்றியனவும் எளிதானவையல்ல; மிக்க அபாயகரமானவையும் கூட.
மிகவும் தெளிவான முறையில் புனைந்து கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை நேர்மையுடனும் தைரியத்துடனும் வேருடன் பிடுங்கியெறிவது இஸ்லாமியக் கலைகளில் நன்கு பாண்டித்தியம் பெற்ற வர்களின் பொறுப்பாகும். புனைந்துரைகப்பட்ட ஹதீஸ்கள் போலியான விளக்கங்கள் தருவன; அறியாமையை நிலைக்கச் செய்வன; குர்ஆனுக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் துரோகம் இழைப்பன.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.