அஷ்ஷூறா – கந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனிய கோட்பாடு
ஷெய்க் அஹ்மத் அல் றைஸூனி இந்த சொல் அல்லது கோட்பாடு பற்றி மிக நுணுக்கமாக ஆய்ந்து தெரிவிக்கும் கருத்துகளும் முன்வைக்கும் வாதங்களும் முஸ்லிம் உலகின் புனர்நிர்மாணத்துக்கும் சீர்திருத்தத்துக்கும் அஷ்ஷூறா எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
குர்ஆனில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது அஷ்ஷூறா. அல்லாஹ் வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதனை நடைமுறைப் படுத்தியுள்ளார்கள். அன்னாரின் தோழர்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள். என்றாலும், இன்றைய கால கட்டத்தில் அதன் முக்கியத்துவம் பெரிதும் உணரப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வளவுதான் அஷ்ஷூறா குறித்து எழுதவும் பேசவும் பட்டிருந்தாலும் கூட, யதார்த்த இஸ்லாமிய வாழ்வில் அதன் பிரயோகம் எவ்வித வலுவும் அற்றதாக, பெரு மளவில் புறக்கணிப்புச் செய்யப்பட்டதாகவே அமைந்துள்ளது. இத்தகு நிலைமை, முஸ்லிம் உலக அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வாழ்விலும் பாதகமான விளைவுகளுக்குக் கால் கோரியுள்ளது.
கலந்தாலோசித்தல் என்பது அனைத்து முஸ்லிம்களதும் அன்றாட நலன்களைப் பாதுகாக்கக் கூடிய ஓர் அம்சமாக அமைதல் வேண்டும். அதுவே முஸ்லிம்களது சீர்திருந்திய வாழ்வமைப் பினை நெறிப்படுத்தும் கருவியாக அமையும்.
அஷ்ஷூறா எனும் கோட்பாடு முஸ்லிம் சமூக வாழ்வில் எவ்வாறு அறிமுகப்படுத்தப்படலாம், நிறுவனமயப்படுத்தப்படலாம் பிரயோகிக்கப்படலாம் முதலிய விடயங்கள் குறித்தே இந்நூல் பெரிதும் உரையாடுகின்றது.
அஹ்மத் அல் றைஸூனி இந்த முயற்சியில் தீட்சண்யமான புதிய நோக்குகளுடன் இதுவரை பெரிதும் உரையாடப்படாத பல அம்சங்கள் மீது வாசகர்களின் கவனத்தை ஈர்த்தெடுக்கின்றார்.
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷய தானங்கள், எழுப்பப் பட்டிருக்கும் வாதங்கள் என்பன குறித்து வாசகர்கள் அனைவருமே ஒருமித்த கருத்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் இணக்கம் காணக் கூடிய சில; முரண்பாடு கூடிய சில. இவை குறித்த உரையாடல்கள் இடம்பெற வேண்டும். அஷ்ஷூறாவின் எதிர் பார்ப்பும் இத்தகுகருத்துப் பரிமாற்றங்களே. எவ்வாறாயினும் இந்நூலின் கருத்துகளும், ஆராயப்பட்டுள விவகாரங்களும் சாதாரண வாசகர்களுக்கும், இஸ்லாமிய அறிவின் தோட்டத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் நலன் பயப்பனவாகவே அமையும் என்பது எமது நம்பிக்கை.
மூல நூலின் அடிக்குறிப்புகளும் உசாத்துணை நூல்களின் பட்டியலும் தமிழ் வாசகத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன. அவை முழுவதும் அறபு மூல நூல்களாகவே அமைந்துள்ளமையால் மேலும் விவரங்கள் வேண்டுவோர், International Institute of Islamic Thought (IIIT) ஜோர்தான் கிளை வெளியிட்ட அறபு மூல நூலை அல்லது லண்டன் கிளை வெளியிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்க்கவும். முக்கியத்துவமும் தேவையும் கருதி இந்நூல் மீள்பிரசுரம் பெறுகின்றது.
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.